Tuesday, April 16, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்இனி ஒருபோதும் அரசியலில் நான் ஈடுபடபோவதில்லை- தமிழருவி மணியன்

இனி ஒருபோதும் அரசியலில் நான் ஈடுபடபோவதில்லை- தமிழருவி மணியன்

ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சியை தொடங்கப் போவது இல்லை என்று நேற்று ரஜினிகாந்த் தனது 3 பக்க அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் உடல் நலமே தங்களுக்கு முக்கியம் என்று அவரின் ரசிகர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழருவி மணியன், இனி ஒருபோதும் அரசியலில் நான் ஈடுபடபோவதில்லை என்றும், ‘தமிழருவி மணியன் செத்துட்டான்’ என்றும் கூறியுள்ளார். மேலும், இது குறித்த அறிக்கையையும் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்து விட்டது.

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை.இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம்.

இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.

என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன்.

தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்.” இவ்வாறு அதில் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments