பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் அணுக்கழிவுகள் அங்கேயே சேமிக்கப்படுவது உறுதியாகியுள்ளது. இது ஆபத்து.
அணுக்கழிவுகளை பாதுகாப்பதற்கான பாதாள கட்டமைப்பு வேறு இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் இது. முதல் இரு அணு உலைகளின் கழிவுகளும் அந்த வளாகத்தில் தான் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
அணுக்கழிவுகளில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தென் தமிழக மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட்டு தமிழ்நாட்டுக்கு வெளியில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அணுக்கழிவு சேமிப்பு பாதாள மையத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.