ஷார்ட்ஸ் அணிந்து சென்றதால் வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஷார்ட்ஸ் அணிந்து வந்திருந்ததால், வங்கியில் நுழைய வாடிக்கையாளருக்கு வங்கிக் கிளை அனுமதி மறுத்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது
பள்ளி, கல்லூரிகள், கோயில்க்ச்ளில், அலுவலகங்களில் ஆடைக் கட்டுப்பாடு குறித்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பொதுமக்கள் வந்து செல்லும் வங்கிக் கிளைகளில் பொதுவாக ஆடைக் கட்டுப்பாடு குறித்து இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஆனால் வங்கிக்கு சென்றபோது ஆடைக் கட்டுப்பாடு இருப்பதாக கூறி வேறு ஆடை அணிந்து வருமாறு வங்கிக் கிளை ஊழியர் ஒருவர் தன்னை வற்புறுத்தியதாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்ற ஆஷிஷ் என்ற வாடிக்கையாளர், தான் ஷார்ட்ஸ் அணிந்து சென்றதாகவும், அப்போது வாடிக்கையாளர்கள் இப்படி அரைக்கால் சட்டை அணிந்து வருவது நாகரீகம் கிடையாது என்பதால் முழுக்கால் சட்டை அணிந்து வங்கிக்கு வருமாறு என்னிடம் வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்தார். இது போல வாடிக்கையாளர்கள் என்ன ஆடை அணிய வேண்டும், என்ன ஆடை அணியக் கூடாது என வரையறுக்கும் விதமாக அலுவலக ரீதியான கொள்ளைகள் ஏதேனும் உள்ளனவா?” என ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
சமூக வலைத்தளத்தில் விரைவாகவே ஆஷிஷின் பதிவு வைரலாக மாறியதுடன், நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துவந்தனர். இந்த விவகாரம் புதிய விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் எஸ்.பி.ஐ வங்கியின் வாடிக்கையாளர் சேவை பிரிவினர் ஆஷிஷின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்தனர்.
அதில், உங்களுடைய பிரச்னையை புரிந்துகொண்டோம். அதனை மதிக்கிறோம். இதனை ஒரு வாய்பாக கருதி உங்களுக்கு விளக்கம் தர விரும்புகிறோம், அப்படி கூறுவது போல வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேக ஆடைக்கட்டுப்பாடு எதுவும் எஸ்.பி.ஐக்கு இல்லை. பொது இடத்துக்கு எப்படி செல்வோமோ அப்படி செல்ல வேண்டும் மேலும் உள்ளூர் அளவிலான ஏற்றுக்கொள்ளும்ப்படியான ஆடைகளை அணிந்து வரலாம் எனவும், சம்பந்தப்பட்ட வங்கி கிளையின் கிளை எண் மற்றும் பெயரை தெரிவியுங்கள். என்ன என பார்த்து சொல்லுகிறோம் என தெரிவித்திருந்தனர்.
இதனிடையே எஸ்பிஐ வங்கி கிளை மீது புகார் தெரிவித்த ஆஷிஷ் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், என்னுடைய வீட்டுக்கு எஸ்.பி.ஐ வங்கியின் தலைமை மேலாளர் ஜாய் சக்கரபோர்த்தி வந்திருக்கிறார். அவர் என் வீட்டுக்கே வந்து எனது பிரச்னையை சரி செய்து தருவதாக உறுதியளித்திருக்கிறார். எனவே வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எதுவும் தேவையில்லை. இந்த புகாரை திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.