தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட பா.ச.க. செய்தி தொடர்பாளர்கள் மீதும், மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடுத்து அவர்களை கைது செய்ய மறுக்கும் இந்திய அரசின் போக்கினை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நபிகள் நாயகம் குறித்து அவதூறு செய்தவர்களை எதிர்த்து நாடெங்கும் அமைதியான முறையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு முயற்சியினை மேற்கொண்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்த்து போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது இந்த அரசின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கவே இத்தகைய போக்கு உதவும். சனநாயக சக்திகள் அனைத்தும் இணைந்து இதற்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருமாறு வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.