Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்மாண்டஸ் புயலால் சென்னையில் ரூ.700 கோடி மதிப்பில் சேதம் - முதற்கட்ட கணக்கீடு

மாண்டஸ் புயலால் சென்னையில் ரூ.700 கோடி மதிப்பில் சேதம் – முதற்கட்ட கணக்கீடு

சென்னை

மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் ரூ.700 கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல் கணக்கீட்டின்படி தெரியவந்துள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே “மாண்டஸ்” புயல் கரையை கடந்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. புயலால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க வசதியாக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, தலைமை பொறியாளர் ராஜேந்திரன், துணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் விடிய விடிய களப்பணியில் ஈடுபட்டனர்.

இந்த இரண்டு நாட்களில் சென்னையில் 15 செ.மீ.க்கு அதிகமாக மழை பெய்த நிலையிலும், பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேக்கம் ஏற்படவில்லை. ஆனால், புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்று வீசியது. இதனால், 400-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. மேலும், 200-க்கும் மேற்பட்ட மரக்கிளைகளும் விழுந்தன. 150-க்கும் மேற்பட்ட தெரு மின் கம்பங்கள், 200-க்கும் மேற்பட்ட சாலைகள், 15-க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்டவை சேதம் அடைந்தன.

சென்னை மாநகராட்சி மற்றும் காவல் துறை என 50,000-க்கும் மேற்பட்டோர் களப்பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, சாலையில் விழுந்த மரங்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் உடனடியாக அகற்றப்பட்டன. எனவே, மாநகரப் பேருந்துகள், வாகனங்கள் இன்று (டிச.10) வழக்கம் போல் இயக்கப்பட்டன.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சென்னையில் சேதம் மதிப்பாக 700 கோடி ரூபாய் முதற்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களுக்கு பின், மொத்த சேத மதிப்பு கணக்கிடப்பட்டு, அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். சேதமடைந்த பகுதிகளில் உடனடி சீரமைப்பு பணிகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 400 மரங்கள் விழுந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், சில இடங்களில் கணக்கில் வராமல் இருக்கலாம். அவற்றை கணக்கிடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது” என்றார்.

- Advertisment -

Most Popular

Recent Comments