Friday, May 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஆந்திராவில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம் – ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம் – ஜெகன் மோகன் ரெட்டி

விசாகப்பட்டினம்

ஆந்திராவில் இன்று முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. பீகாரைத் தொடர்ந்து நாட்டில் 2-வது மாநிலமாக ஆந்திரா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துகிறது.

நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில்தான் இன்றளவும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாடு விடுதலைக்குப் பின்னர் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு ஜாதிக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. அண்மையில் பீகார் மாநில அரசு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை பகிரங்கப்படுத்தியது. இந்தியாவிலேயே பீகார் தான் முதல் மாநிலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. இப்புள்ளி விவரங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து ஆந்திரா மாநில அரசு 2-வது மாநிலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்குகிறது. இன்று முதல் ஜனவரி 28-ந் தேதி வரை முதல் கட்டமாக அனைத்து கிராமங்களிலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக பிரத்யேகமாக மொபைல் ஆப் ஒன்றையும் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆந்திராவில் மொத்தம் 700க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. ஒவ்வொரு ஜாதியிலும் எத்தனை பேர் என்கிற புள்ளி விவரம் சேகரிக்கப்படுகிறது. இதற்கான பணியில் ஆந்திரா அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் வார்டு செயலக பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.

முதல் கட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் விடுபட்டோரை சேர்க்க ஜனவரி 29-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை 2-வது கட்டமாகவும் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படும். ஆந்திரா ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கை பிப்ரவரி 15-ந் தேதி நிறைவு செய்யப்படும். லோக்சபா தேர்தல், ஆந்திரா சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அதிரடி நடவடிக்கை ஆந்திராவில் மட்டுமல்ல நாட்டின் பிற மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டிலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதில் ஆளும் திமுக உள்ளிட்ட கட்சிகள் உறுதியாக உள்ளன.

- Advertisment -

Most Popular

Recent Comments