Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்2021 முதல் காலாண்டுக்குள் கொரோனா மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய சூழல் உருவாகும் - இலங்கை போராசிரியர்...

2021 முதல் காலாண்டுக்குள் கொரோனா மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய சூழல் உருவாகும் – இலங்கை போராசிரியர் மாலிக் பீரிஸ்

கடுமையான முயற்சிகள் எடுத்தாலும் இவ்வாண்டு இறுதிவரையில் கோவிட் -19 (கொரோனா) வைரஸ் தொற்று நோய்க்கான மருந்துகளை கண்டுபிடிக்க முடியாது, அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் அதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார மையத்தின் நோய்த்தடுப்பு நிபுணர்களின் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், ஹாங்காங்க்  சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனத்தின் தொற்று நோய்கள் குறித்த ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக தற்போது பணியாற்றி வருபவருமான இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர் மாலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் குறித்த ஆராய்சிகளில் அதிகமாக ஆர்வம் காட்டி வரும் பேராசிரியர் மாலிக் பீரிஸ், சார்ஸ் தொற்றுநோய் குறித்த மருத்துவ ஆராய்ச்சி குழுவின் தலைமை நிபுணராக பணியாற்றியவர். கோவிட் -19 தொற்று குறித்த தன்மைகள் மற்றும் அதற்கான மருந்துகள் கண்டுபிடிப்பதில் உள்ள சாத்தியங்கள் குறித்து அவர் கூறியுள்ளதாவது.

கோவிட் -19 (கொரோனா வைரஸ்) தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து இதுவரை எந்தவொரு ஆதாரமான காரணமும் கண்டறியப்படவில்லை. எனினும் உயிரினம் ஏதேனும் ஒன்றில் இருந்து இவ்வாறான வைரஸ் தொற்றுக்கள் பரவுவது வழக்கமான விஷயமாக உள்ளது. இந்த நூற்றாண்டில் இதுவரை பரவிய வைரஸ் தொற்று நோய்களில் கோவிட் -19 வைரஸானது மிகவும் மோசமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் மிக மோசமாக அமைந்துள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கான மருந்துகளை கண்டறிய பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இது வரையில் வெற்றிகரமான மருந்துகள் என எதனையும் கண்டறியவில்லை.

இத்தாலியில் மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் கூறினாலும் கூட, இப்போது வரையிலும் அவை எலிகளுக்குள் செலுத்தி எலியின் இரத்த பரிசோதனை செய்து பார்த்தே முடிவுகளை அறிவித்துள்ளனர். இந்த மருந்துகளை மனிதர்களுக்கு பரிசோதிக்க இந்த ஆண்டு இறுதியாகலாம். அதேபோல் அமெரிக்கா மூன்று பரிசோதனை முயற்சிகளையும், சீனா மூன்று பரிசோதனை முயற்சிகளையும் இங்கிலாந்து – ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து ஒரு பரிசோதனை முயற்சியையும் முன்னெடுத்துள்ளன.

இவர்கள் மனிதர்களுக்குள் செலுத்தி இந்த மருத்துவ பரிசோதனைகளை செய்துள்ளனர். ஆனால் அவற்றில் சாதகமான தன்மைகள் இன்னமும் தென்படவில்லை என்றே கூறப்படுகின்றது. எவ்வாறு இருப்பினும் கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கான மருந்துகளை இந்த ஆண்டு கண்டுபிடிக்க எந்த வாய்ப்புகளும் இல்லை.

இந்த ஆண்டு இறுதிக்குள் தொற்றுக்கான மாற்று மருந்துகள் கண்டறியும் முயற்சிகள் மட்டுமே முன்னெடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. எனினும் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் மருந்துகளை மக்களுக்கு வழங்கக்கூடிய சூழல் உருவாகும் என நம்ப முடியும் என்று மாலிக் பீரிஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments