மதுரை
சாத்தான்குளம் மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவது என கொள்கை முடிவு எடுத்துவிட்டு நீதிமன்றத்தில் முறையிடுவது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் வர்த்தகர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போலீஸ் தாக்குதல் மரணங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. மேலும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனை சாத்தான்குளத்தில் தங்கி விசாரணை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீசார் ஒத்துழைக்காததற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை தூத்துக்குடி ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டுவர நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது, அரசு தரப்பில் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது என அரசு கொள்கை முடிவு எடுத்திருக்கிறது. கொள்கை முடிவு எடுத்த பின்னர் நீதிமன்றத்தில் எதற்காக முறையிட வேண்டும்? என்றும் அதிருப்தியை வெளிப்படுத்தினர் நீதிபதிகள்.
அத்துடன், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது. சிபிஐ விசாரணைக்கு மாற்றும் தமிழக அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணைக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.