மதுரை
சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை, தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. இன்று, நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி ஆகியோரின் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோரின் பிரேத பரிசோதனை நடைபெற்று அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பிரேத பரிசோதனை அறிக்கையில், தந்தை, மகன் உடலில் அதிக காயங்கள் உள்ளன. எனவே சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதிகளுக்கு மட்டுமே தெரியும் வகையில் சீலிட்ட உறையில் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இப்போது நீதிபதிகள் குறிப்பிட்டதன் அடிப்படையில் இருவரது உடலிலும் அதிக காயங்கள் இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது போலீசாருக்கு எதிரான முக்கிய ஆதாரமாக பார்க்கப்படுகிறது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் போலீசார் அழைத்தபோது வராமல் உருண்டதால் ஊமைக் காயம் ஏற்பட்டதாக, காவல்துறையினர் எப்ஐஆரில் கூறியிருந்தனர். ஆனால் நேற்று வெளியான பென்னிக்ஸ் கடையருகே உள்ள சிசிடிவி கேமராவில், இருவருமே, அமைதியாக போலீசாருடன் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில், இருவர் உடலிலும் பல காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அப்படியானால், இவர்கள் லாக்அப்பில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டிருக்க கூடும் என்பதற்கான முக்கிய ஆதாரமாக இது மாறியுள்ளது.