Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் துப்பாக்கி முனையில் கொள்ளை

ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் துப்பாக்கி முனையில் கொள்ளை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் தயாராகும் நவீன செல்போன்கள் நாடு முழுவதும் வினியோகம் செய்யப்படுகின்றன. அவ்வாறு இங்கு தயாரான ரூ.10 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கன்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு, நேற்று முன்தினம் மாலை மும்பைக்கு புறப்பட்டது.

இந்த லாரியை உத்தரபிரதேசத்தை சேர்ந்த இர்பான் (வயது 40) என்ற டிரைவர் ஓட்டிச் சென்றார். ஆந்திர மாநிலம் நகரி அருகே சென்றதும், இந்த லாரியை பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரி திடீரென வழிமறித்தது. உடனே அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சாலையோரமாக நிறுத்தினார்.

உடனே அந்த லாரியில் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் கீழே இறங்கி வந்தது. துப்பாக்கியை காட்டி டிரைவரை மிரட்டிய கும்பல், அவரை சரமாரியாக தாக்கியது. பின்னர் அவரது கை, கால்களை கட்டிப் போட்டதோடு சத்தம் போடாமல் இருப்பதற்காக அவரது வாயில் துணியையும் அடைத்து வைத்தது.பின்னர் கன்டெய்னர் லாரியில் இருந்த செல்போன் பெட்டிகளை தாங்கள் வந்த லாரியில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.

இதற்கிடையே ஒரு வழியாக தப்பித்த டிரைவர் இர்பான், நகரி போலீஸ் நிலையத்திற்கு நேற்று சென்று நடந்த சம்பவத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் மத்தய்யாவிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை கும்பலை தேடி வருகிறார்கள்.

மேலும் நகரியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். சினிமா பாணியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன்கள் கொள்ளை போன சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் வந்த பின்னர் தான் கொள்ளை போன செல்போன்களின் சரியான மதிப்பு தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

டிரைவரை கட்டிப்போட்ட கும்பல், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு சரக்குகளை ஏற்றுவது போல செல்போன் இருந்த பெட்டிகளை கடத்திச்சென்றுள்ளனர்.

உண்மையிலேயே செல்போன் கொள்ளை போனதா? அல்லது செல்போனை திருடி விட்டு டிரைவர் நாடகமாடுகிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். டிரைவரின் உடலில் காயங்கள் எதுவும் பெரிய அளவில் இல்லை என்றும், எனவே கொள்ளைக்கும் அவரே உடந்தையாக இருந்தாரா என்றும் தெரியவில்லை. அவர் இந்தி மட்டுமே பேசுவதால் அவரை விசாரிப்பதில் சிக்கல் நீடிப்பதாகவும் போலீசார் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments