Friday, September 29, 2023
Home தமிழகம் இனி ஒருபோதும் அரசியலில் நான் ஈடுபடபோவதில்லை- தமிழருவி மணியன்

இனி ஒருபோதும் அரசியலில் நான் ஈடுபடபோவதில்லை- தமிழருவி மணியன்

ரஜினி தொடங்க இருந்த அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தனது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, அரசியல் கட்சியை தொடங்கப் போவது இல்லை என்று நேற்று ரஜினிகாந்த் தனது 3 பக்க அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரஜினியின் உடல் நலமே தங்களுக்கு முக்கியம் என்று அவரின் ரசிகர்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அது குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழருவி மணியன், இனி ஒருபோதும் அரசியலில் நான் ஈடுபடபோவதில்லை என்றும், ‘தமிழருவி மணியன் செத்துட்டான்’ என்றும் கூறியுள்ளார். மேலும், இது குறித்த அறிக்கையையும் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜர் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். ஐம்பதாண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் அனைத்து மேலான பொதுவாழ்க்கைப் பண்புகளும் பாழடைந்துவிட்டன. அரசியல் ஊழல் மலிந்த சாக்கடையாகச் சரிந்து விட்டது.

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நேர்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எள்ளளவும் மதிப்பில்லை. நான் ஒருபோதும் அறத்திற்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்தும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை.இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜர் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடர்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம்.

இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமர்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன. மாணிக்கத்திற்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை.

என் நேர்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைம்மாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோர்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பர்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன்.

தி.மு.க.விலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றார். நான் போகிறேன்; வரமாட்டேன்.” இவ்வாறு அதில் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments