1639 ஆகஸ்ட் 22ம் நாள் மதராசப் பட்டினத்தை ஈஸ்ட் இந்தியா கம்பெனி சென்னப்ப நாயக்கன் என்பவரிடமிருந்து வாங்கிய நாள். சென்னை என அழைப்பதை விட இதனை மதராஸ் அல்லது மதராசபட்டினம் என்று அழைப்பதே பொருத்தம்.
பழமைவாய்ந்த நகரமான சென்னைக்கு வயது 655 என்கின்றனர்.
இந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதியுடன் சென்னைக்கு வயது 655 ஆகிறது.
பென்னேஸ்வர மடம் கிராமம் பெண்ணையாற்றங்கரையில் உள்ள பெரிய பாறையின் சரிவில் விஜயநகரப் பேரரசின் மன்னன் கம்பண உடையர், தம் ஆட்சியாண்டு சகம் 1291 ஆம் ஆண்டுப் பிலவங்க வருஷம் பூர்வபட்சம் ரோகிணி நட்சத்திரத்திற்கு நிகரான வரலாற்று ஆண்டு 1367 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதியன்று பொறித்த கல்வெட்டில் மாதரசன் பட்டணம் (‘Maadharasan Pattanam’) (சென்னை) குறித்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. 31 வரிகளில் அமைந்த இக்கல்வெட்டுத் தமிழ் மொழியில் தமிழ் வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு விஜயநகரப் பேரரசின் ஆட்சியில் வீர கம்பண உடையார் (Vira-Kampana-Udaiyar) என்னும் இரண்டாம் குமார கம்பண்ணா (Kumara Kampanna II) முளபா³கி³லு : Mulabagilu மண்டலேஸ்வரனாக (ஆளுநராக) இருந்து ஆண்டுவந்த போது பென்னேஸ்வர மடம் கிராமத்தில் பொறிக்கப் பட்டுள்ளது. இவர் சங்கம வம்சத்தைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசர் முதலாம் புக்க இராயரின் (Bukka Raya I) ((ஆட்சியாண்டு கி.பி. 1356–1377) இரண்டாவது மகன் ஆவார்.வீர கம்பண உடையாரின் பட்டத்தரசியே கங்காதேவி ஆவார். மதுராவிஜயம் (Madura Vijaya) (மதுரையின் வெற்றி ‘The Conquest of Madurai’) அல்லது வீர கம்பராயச் சரிதம் (‘Vira Kamparaya Charitha’) என்னும் தலைப்பில் கங்காதேவி இயற்றிய சம்ஸ்கிருத வரலாற்றுக் காவியம் (Sanskrit historical poem) ஆகும். மதுரை சுல்தான்களின் கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர் கம்பண உடையார் ஆவார். இவர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து மதுரை சுல்தானகத்தை வீழ்த்தி மதுரையைக் கைப்பற்றுவதை இந்நூல் விவரிக்கிறது. இந்தக் குறிப்பில் மாதரசன் பட்டணம் 1367 ஆம் ஆண்டிற்கு முன்பே ஒரு துறைமுகமாக விளங்கியுள்ளது. கம்பணரின் கல்வெட்டு இக் கருத்திற்குச் சான்றாகவும் ஆதரவாகவும் அமைந்துள்ளது.
விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இருந்து இப் பகுதியை ஆட்சி செய்த தாமர்ல வெங்கடாத்திரி நாயக்கர், சந்திரகிரிக் கோட்டை இராஜா மகால் தர்பார் மண்டபத்தில் இருந்து, கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தன் கட்டுப்பாட்டில் இருந்த மூன்று சதுரமைல் பரப்பளவுள்ள ஒரு நிலத்துண்டினை வர்த்தகத்திற்காகக் கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதிநிதியான ஃபிரான்சிஸ் டே (Francis Day) (கி.பி.1605–1673) க்கு சட்டப்படி குத்தகைக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த ஆகஸ்டு மாதம் 22 ஆம் தேதி சென்னை நகரத்தின் நிறுவன நாளாகக் கருதப்பட்டு 2004 ஆம் ஆண்டு முதல் சென்னை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
மெட்ராஸ் என்பது சென்னை மாநகரமாக கடந்த 1996-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஆங்கிலேயர்களால் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி உருவாக்கப்பட்டதாக கருதி, சென்னையின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து 250 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் பென்னேஸ்வர மடம் கிராமத்தில் பெரிய பாறைக் கல்வெட்டில், சென்னையில் கடற்கரை ஒட்டி இன்றும் அதே பெயரில் இருக்கும் பல இடங்களின் பெயர்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. அவை அனைத்தும் அன்றைய துறைமுக நகரங்களாக இருந்தவை.
முளுவாய் ஆளுநர் குமார கம்பண்ண உடையாரின் படைத்தளபதி சோமப்பதண்ட நாயகனின் மகன் கூளி மாராயனின் வீரச் செயல்களை 31 வரிகளில் பெரிய கல்வெட்டாக வெட்டி வைத்துள்ளார். இந்த கல்வெட்டில்தான் சென்னையின் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அக்கல்வெட்டின் 16, 17வது வரிகளில்….
“…சானபட்டணம், புதுப்பட்டணம், மாதரசன் பட்டணம் சத்திக்குவரிய …பட்டணம், நீலாங்கரையான் பட்டணம், கோவளம் மற்றுள்ள பல பட்டணங்களும், கரையும், துறையும் உட்படக் கொண்டு இராசாவின் கைய்யிலே காட்டிக்குடுத்து இராசபதமாந தாந’’
என்று குறிப்பிட்டுள்ளது.
இக்கல்வெட்டு கடந்த 1367-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி வெட்டப்பட்டது. நீர்ப் பாசனத்துக்காக கண்டரக்கூளிமாராயன் பெருவாய்க்கால் வெட்டிய செய்தி, வீரப்பிரதாபங்களைப் பறைசாற்றுகிறது.
கம்பண்ண உடையார் பல வெற்றிகளைப் பெறக் காரணமாக இருந்தவர் இவரது தளபதியும் நாயக்கர் மகாபிரதாணியுமான சோமப்ப தண்டநாயக்கரின் (Somayappa-Dhanda Naayakkar) மகன் தண்ட கூளிமாராய நாயக்கர் (Maaraaya-Naayakkar) ஆவார். முளபா³கி³லு ஆளுநர் குமாரகம்பண்ண உடையாரின் படைத்தளபதி கூளிமாரய நாயக்கரின் வீரதீரச் செயல்களை விளக்குவதற்கும், கண்டர் வெளி பெருவாய்க்கால் என்னும் வாய்க்காலை வெட்டியதற்காகவும் 31 வரிகளில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்வெட்டின்படி, ஆங்கிலேயர்கள் சென்னைக்கு வருவதற்குப் பல நூற்றண்டு களுக்கு முன்பே, அதாவது விஜயநகரப் பேரரசின் காலத்திலேயோ அல்லது அதற்கும் முன்போ, இந்த மாதரசன்பட்டணம் துறைமுகம் இருந்துள்ளது. சென்னை மற்றும் இதன் சுற்றுப் பகுதிகளில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள் இப்பகுதி வளம் கொழிக்கும் வணிகத் துறைமுகமாக விளங்கியுள்ளது (flourishing trade port) பற்றியும் சான்று பகர்கின்றன.
சந்திராணபட்டணம் (இன்றைய சதுரங்கப்பட்டணம் எனும் சத்ராஸ் (Sadras). டச்சுக் கோட்டை ஒன்று இங்குள்ளது. அமைவிடம் 12°31′30″N அட்சரேகை 80°9′44″E தீர்க்கரேகை).
புதுப்பட்டணம் (இன்று இதே பெயருடன் கல்பாக்கம் அருகே உள்ளது அமைவிடம் 12° 30′ 6.8328” அட்சரேகை N 80° 8′ 56.2992” E தீர்க்கரேகை).
மாதரசன் பட்டணம் (மதராச பட்டணம் என்ற மதராஸ்)
நீலாங் கரையான் பட்டணம் (இன்றைய நீலாங்கரை அமைவிடம் 12° 56′ 57.4152” N அட்சரேகை 80° 15′ 18.0468” E தீர்க்கரேகை).
கோவளம் (அமைவிடம் 12°47’13.21″N அட்சரேகை 80°15’1.6″E தீர்க்கரேகை)
போன்ற துறைமுகங்கள் கூளிமாரய நாயக்கரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீலாங்கரையன் என்பவன் சோழர் காலத்த்தில் குறுநில மன்னனாக இருந்துள்ளான். இவன் சென்னையைச் சுற்றியுள்ள கோவில்களுக்குக் கொடையளித்துள்ளான். கூளிமாரய நாயக்கர் பெண்ணையாற்றில் கண்டர் வெளி பெருவாய்க்கால் என்னும் வாய்க்காலை பெண்ணையாற்றுக்கும் பெண்ணைநாயினார் கோவிலுக்கும் இடையே வெட்டியுள்ளதை முன்னிட்டும் இக்கல்வெட்டுப் பொறிக்கப் பட்டுள்ளதாகவும் இது குறிப்பிடுகிறது.
இந்தக் கல்வெட்டு கூறும் மாதரசன்பட்டணம் துறைமுகம் சென்னை இராயபுரம் அருகே செயல்பட்டிருக்க வேண்டும்.
பென்னேஸ்வரமடம் கம்பணர் கல்வெட்டின்படி மாதரசன் பட்டணம் என்னும் மதராசப் பட்டணத்திற்கு (இன்றைய சென்னைக்கு) வயது 655 ஆண்டுகள் ஆகும்.
மாதரசன்பட்டணம் என்ற சொல் மதராசபட்டணம் என்று மருவி மென்மேலும் சிதைவுற்று முடிவில் மெட்ராஸ் என்று வழங்கலாயிற்று. இந்த அடிப்படையில் மாதரசன் பட்டணம் என்பது இன்றைய சென்னைப் பெருநகரை உள்ளடக்கியிருந்தது.
வரலாற்றின்படி சென்னைக்கு வயது எழுநூறு.
சென்னை நகரத்தின் சில பகுதிகள் உருவாகி 2000 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இன்றைய மாம்பலம் பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங் கள் இருந்திருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் ரோமானியர் வெளியிட்ட நாணயம் மாம்பலத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளது.
மயிலாப்பூர் முக்கியமான நகரம். அதன் ஒரு பகுதியாக திருவல்லிக் கேணி இருந்திருக்கிறது. பார்த்தசாரதி கோயிலில் பல்லவர் கால கல்வெட்டுகள் உண்டு. அவை சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்டவை. இன்றைய சென்னையின் பல பகுதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவை. திருவலியதாயம் (பாடி), ஒற்றியூர், மணலி, திருமுல்லைவாயில் என சொல்லிக் கொண்டே போகலாம்.
விஜயநகர ஆட்சியின்போது முளுவாய் ராஜ்ஜியத்தின் கீழ் பையூர் நாடு இருந்தது. பையூர் பற்றானது சோழர்களின் நிகரிலி சோழ மண்டலத்தின் கீழ் இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் பையூர் பகுதி விஜயநகர ஆளுகையின் கீழ் வந்தது. முளுவாய் ஆளுநர் குமார கம்பண்ண உடையாரின் படைத்தளபதி சோமப்பதண்ட நாயகனின் மகன் கூளிமாராயனின் வீரச் செயல்களை 31 வரிகளில் பெரிய கல்வெட்டாக வெட்டி வைத்துள்ளார். இந்த கல்வெட்டில்தான் சென்னையின் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நன்றி
Epigraphy – கல்வெட்டியல்.