Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்மாதத்தவணை தளர்வுக்கு வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்து ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும் - பா.ம.க...

மாதத்தவணை தளர்வுக்கு வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்து ரிசர்வ் வங்கி ஆணையிட வேண்டும் – பா.ம.க நிறுவனர் ராமதாஸ்

சென்னை

3 மாத கடனை தள்ளி கட்டினால் அதற்கு சராசரியாக பல லட்சங்களில் ஒவ்வொருவரும் வட்டி கட்ட வேண்டியது வரும் என்றும் எனவே அரசு வட்டி தள்ளுபடி தான் அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத்தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தாலும், ஊரடங்காலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இது நிம்மதியை அளிக்கும் என்றாலும் கூட, முழுமையான தீர்வு அல்ல. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வாடுகின்றனர். சுயதொழில் செய்பவர்கள் வருவாயை இழந்து தவிக்கின்றனர். அவர்களால் மாதக்கடன் தவணையைச் செலுத்த முடியாது என்பதால், அவர்களுக்கு மாதக்கடன் தவணை செலுத்துவதில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கும்படி கடந்த மார்ச் மாதம் பா.ம.க வலியுறுத்தியது. ரிசர்வ் வங்கியும் அதையேற்று முதல் கட்டமாக 3 மாதக் கடன் தவணைகளை ஒத்திவைக்க வங்கிகளை அனுமதித்தது.

அதன் பின்னர் இரு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கள நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஒருபுறம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கூட, மறுபுறம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கடன்தாரர்களுக்கு வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இத்தகைய சூழலில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரைக்குமான கடன் தவணைகளைச் செலுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து கடன்தாரர்களைக் காப்பாற்றியிருக்கிறது. வருமானமே இல்லாத சூழலில் கடன் தவணையைச் செலுத்துவது சாத்தியமற்றது.

ஒருவேளை கடன் தவணையைச் செலுத்தியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருந்தால், அதற்காக அவர்கள் தங்களின் உடமைகளை வந்த விலைக்கு விற்க வேண்டியிருந்திருக்கும்; அதற்கு வழி இல்லாதவர்கள் கடன் தவணை கட்டத் தவறியவர்களாக அறிவிக்கப்பட்டு, இனிவரும் காலங்களில் அவர்கள் கடன் பெறும் தகுதி குறைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றுள்ளனர்.

ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கப்போகும் விலை மிகவும் அதிகமாகும். கடந்த மார்ச் மாதம் கடன் தவணை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்ட போது, ஒத்திவைக்கப்பட்ட தவணைத் தொகைகளுக்கான வட்டி முழுமையும் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வங்கிகளோ அதற்கு மாறாக, ஒத்திவைக்கப்பட்ட 3 மாதத் தவணைகளுக்கு உரிய தொகையை அசலுடன் சேர்த்து, அந்தத் தொகைக்கும் கடன் பருவம் முடிவடையும் வரை வட்டி செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தன.

வீட்டுக்கடன் பெற்ற ஒருவர் மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்குத் தவணை செலுத்தாமல் இருப்பதாகவும், அவருக்கு இன்னும் 15 ஆண்டு தவணைக் காலம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவர் கடன் தவணைக் காலத்தில் கூடுதல் வட்டியாக மட்டும் 4 லட்சத்து 9,500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.ஒருவர் 3 மாதங்களுக்குச் சேர்த்து ரூ.1.50 லட்சம் தவணை செலுத்தாமல் இருந்ததற்காக, அந்தத் தொகையையும் வசூலித்து விட்டு, கூடுதலாக அதை விட 3 மடங்கு தொகையை வட்டியாக வங்கிகள் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்காது; அது அறமும் அல்ல.

இப்போது கூடுதலாக 3 மாதங்களுக்கு கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாதக் கடன் தவணை ரூ.50 ஆயிரத்தைச் செலுத்தாமல் இருப்பவர்கள், கூடுதலாக ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வட்டி செலுத்த வேண்டும். சுமையைச் சுமக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பவனின் தலையிலிருந்து சிறிய சுமையை இறக்கி வைத்துவிட்டு, அதற்கு பதிலாக தாங்க முடியாத பெரும் சுமையைச் சுமத்துவது எப்படி சரியாக இருக்கும்? இது கடன்தாரர்களை மீளவே முடியாத கடன் சுமையில் ஆழ்த்தி விடும்.

கடன்தாரர்களுக்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அளிக்கும் சலுகை என்பது மாதக்கடன் தவணையை ஒத்திவைப்பது மட்டுமல்ல… அதற்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்வதும் தான். எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மே மாதம் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு மற்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் வரையிலான 3 மாதக் கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31-ம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆணையிட வேண்டும்”. இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments