Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்வசந்தகுமார் உடல் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று அடக்கம்

வசந்தகுமார் உடல் கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று அடக்கம்

சென்னை

கொரோனா பாதிப்பால்மரணம் அடைந்த, காங்கிரஸ் எம்.பி யும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமாரின் உடல், சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் இன்று (ஆக. 30) நல்லடக்கம் செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி தொகுதி, காங்கிரஸ் எம்.பியும் தொழிலதிபருமான வசந்தகுமார், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. உயர்தர சிகிச்சை அளித்தும், பலன் அளிக்காமல், நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல், தமிழக முதல்வர், இ.பி.எஸ், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து, நேற்று காலை, வசந்தகுமார் உடல், கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டு, இரண்டு பக்கமும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பென்ஸ் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டது. வாகனத்தின் இருபுறமும் உள்ள கண்ணாடி வழியாக, அவரது உடலை பொதுமக்கள் வெளியே இருந்து பார்க்கும் வண்ணம் வைக்கப்பட்டிருந்தது. காலை 7.15 மணிக்கு, தி.நகர் நடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், நாடார் சமுதாய தலைவர்கள், வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் ஊழியர்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர். பின் வீட்டிலிருந்து புறப்பட்ட வசந்தகுமாரின் உடல் இருந்த வேன், தி.நகரில் அவர், முதன் முதலாக திறந்த, “வசந்த் அண்ட் கோ” கடை முன், 2 நிமிடம் அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, தி.நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில், 2 நிமிடம், அஞ்சலிக்காக நிறுத்தப்பட்டது. சென்னை சத்தியமூர்த்தி பவனில், வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, இரங்கல் கூட்டம்நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், வசந்தகுமார் உடலுக்கு, குடும்பத்தினர், இறுதி சடங்கு நடத்துவதற்கு போதிய நேரம் தேவைப்படுவதால், அவரது மனைவி விருப்பத்தின் படி, சத்தியமூர்த்தி பவனுக்கு கொண்டு செல்லும் திட்டம் கைவிடப்பட்டு, சொந்த ஊருக்கு எடுத்து செல்ல முடிவானது. ஆனால், கட்சி தொண்டர்களின் விருப்பத்திற்காக, அவர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கம் முன், வசந்தகுமாரின் உடல் ஏற்றி சென்ற வாகனம் நிறுத்தப்பட்டது.அங்கு, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல்வாஸ்னிக், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் மாற்று கட்சியினர், மகளிர், இளைஞர்கள் திரண்டு வந்து, வசந்தகுமார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நேற்று பகல் 11.45 மணிக்கு, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் இருந்து புறப்பட்ட வசந்தகுமார் உடல், அவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீவரத்திற்கு சாலை மார்க்கமாக எடுத்து செல்லப்பட்டது. வசந்தகுமார் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், தனித்தனி வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இன்று காலை, 10:30 மணிக்கு அகஸ்தீவரத்தில், வசந்தகுமாரின் பெற்றோர் கல்லறைகள் அமைந்த குடும்ப தோட்டத்தில், அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments